புதுடெல்லி: இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை வரையில் பிரதானமாக யுபிஐ மூலமே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இந்தியாவின் உதவியுடன் சில வெளிநாடுகளிலும் யுபிஐ கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் யுபிஐ கட்டமைப்பைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொருமாதமும் 60 லட்சம் என்ற அளவில் அதிகரித்து வருவதாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஜூன் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை 49 சதவீதம் உயர்ந்து 1,390 கோடியாக உள்ளதாகவும் அதேபோல், பரிவர்த்தனை மதிப்பு 36 சதவீதம்உயர்ந்து ரூ.20 லட்சம் கோடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஜூனில் தினமும் 46.3 கோடி பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் நடைபெற்றுள்ளன. சராசரியாக நாளொன்றுக்குரூ.66,903 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலும் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதுவரையில், அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம்,பூடான் உள்ளிட்ட நாடுகளில் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.