மும்பை: மும்பையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, புறநகர் ரயில் சேவைகளும், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான சாலை சந்திப்புகளில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பையில் இன்றும் நாளையும் (ஜூலை 13 மற்றும் 14) கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மும்பையில் புயல் சுழற்சி உருவாகியுள்ளதால், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், நகரில் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, தொடர் மழை காரணமாக மும்பையின் கிங்ஸ் சர்க்கிள் பகுதி உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நவி மும்பையில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது. இதையடுத்து தானே மற்றும் ராய்காட் ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையின் அந்தேரி மற்றும் வொர்லி நாகா பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.