மகாராஷ்ட்ராவில் நவி மும்பை, உல்வே பகுதியில் ரூ.19,650 கோடி செலவில் கட்டப்பட்ட நவிமும்பை சர்வதேச விமான நிலையம் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. மும்பையின் தற்போதைய விமான நிலையத்தின் நெரிசலை குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த புதிய விமான நிலையம், 1,160 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

விமான நிலையத்திற்கு ‘லோகனேதா டி.பி. பாட்டீல் நவி மும்பை சர்வதேச விமான நிலையம்’ என்று பெயர் அளிக்கப்பட்டுள்ளது. டெர்மினல்-1 ஆண்டுதோறும் 2 கோடி பயணிகளையும், 8 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டுள்ளது. 3,700 மீட்டர் நீள ஓடுபாதை ஏர்பஸ் A380 போன்ற பெரிய விமானங்களையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்கால விரிவாக்கத்தில் மூன்று கூடுதல் முனையங்கள் மற்றும் இரண்டாவது ஓடுபாதையும் அமைய உள்ளது, இதனால் 2036ஆம் ஆண்டில் 9 கோடி பயணிகளைக் கையாள முடியும்.
விமான நிலையத்தின் கூரையை தாமரை இதழ்களை போன்ற 12 தூண்கள் மற்றும் 17 பிரமாண்ட நெடுவரிசை தூண்கள் தாங்குகின்றன. நில அதிர்வுகள், புயல் மற்றும் அதிக எடை போன்றவற்றுக்கு எதிரான பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சரக்கு முனையத்தில், மருந்துகள், அபாயகரமான பொருட்கள் மற்றும் அழுகக்கூடிய பொருட்களுக்கு தனிப்பிரிவுகள், முழுமையாக தானியங்கி மற்றும் AI வசதிகள் நிறுவப்பட்டுள்ளன.
முக அங்கீகாரம், ஸ்மார்ட் பார்க்கிங் மற்றும் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் உள்ள இந்த விமான நிலையம், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மின்சார வாகனப் பேருந்துகளைப் பயன்படுத்தும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற கட்டடக் கலைஞர்கள் ஜஹா ஹதீத் வடிவமைப்பில் 19,650 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவிமும்பை விமான நிலையம், இந்தியாவின் வானூர்தி வலிமையை மேலும் உயர்த்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.