பெங்களூரு: தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கூட திறக்க முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன், காணொலி காட்சி மூலம் நடந்த காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது.
இம்மாத இறுதி வரை தினமும் 1 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கும் உத்தரவை ஏற்க கர்நாடக அரசு மறுத்துள்ளது. இதன் பின்னர் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில், துணை முதல்வர் சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் அசோக் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஏற்பாட்டுக் குழுவினர் கூறியபடி தண்ணீர் திறக்க முடியவில்லை. தினமும் 8000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்க முடியும்.
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைகளை எதிர்த்து மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முன்னதாக காவிரி ஒழுங்காற்றுக் குழு தமிழகத்திற்கு 11500 கன அடி தண்ணீர் திறந்துவிட பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.