இந்தியாவில் பீர் பிரியர்களுக்கு மிகவும் பிரபலமான “BIRA 91” பீர் பிராண்டுக்கு, ஒரு சிறிய பெயர் மாற்றமே பெரிய சோதனையாக மாறியுள்ளது. 2015 ஆம் ஆண்டு அங்கூர் ஜெயின் தொடங்கிய இந்த பிராண்ட், சில ஆண்டுகளில் இந்தியாவின் டாப் 3 பியர்களில் ஒன்றாக உயர்ந்தது. ஆனால் 2023–2024 ஆம் ஆண்டுகளில், அதன் நிறுவனம் “B9 Beverages Private Limited” என இருந்த பெயரை “B9 Beverages Limited” என மாற்றியது. இந்த சிறிய மாற்றமே எதிர்பாராத பிரச்சனைகளை உருவாக்கியது.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி மது கொள்கைகள் நடைமுறையில் உள்ளன. பெயர் மாற்றத்தால் சில மாநில அரசுகள் “BIRA 91” பீரை புதிய நிறுவனம் என தவறாக எண்ணி, புதிய அனுமதி, லேபிள், ரிஜிஸ்ட்ரேஷன் ஆகியவற்றுக்காக மீண்டும் விண்ணப்பிக்குமாறு உத்தரவிட்டன. இதனால் விற்பனை பல மாதங்கள் நிறுத்தப்பட்டு, ரூ.80 கோடி மதிப்பிலான பீர் கையிருப்பாக கிடங்குகளில் சேதமடைந்தது.
இதன் விளைவாக 2023–2024 நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.638 கோடியில் இருந்து 22 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதே சமயம் ரூ.748 கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஊழியர்களுக்கு மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரை சம்பளம் வழங்கப்படாத நிலை ஏற்பட்டது. இதனால், 250-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிறுவன உரிமையாளர் அங்கூர் ஜெயினுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
நிறுவனத்தின் முக்கிய ஆலையொன்று ஆந்திராவில் மூடப்பட்ட நிலையில், தற்போது மைசூரில் உள்ள ஒப்பந்த ஆலையில்தான் உற்பத்தி நடைபெறுகிறது. முதலீட்டாளர்களாக உள்ள பிளாக் ராக் போன்ற பெரிய நிறுவனங்களும் நஷ்டத்தால் பாதிக்கப்பட்டாலும், BIRA 91 பிராண்டை மீட்டெடுப்பதற்காக முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த முயற்சிகள் வெற்றியடையுமா என்பதை, பீர் பிரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.