புதுடில்லி: புத்த மதத் தலைவரும் திபெத்திய மக்களின் ஆன்மிக அடையாளமாகவும் கருதப்படும் தலாய் லாமா, இன்று தனது 90வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது இயற்பெயர் டென்சின் கியாட்ஸோ. திபெத் மக்களின் பாரம்பரிய நம்பிக்கையின் படி, தலாய் லாமா ஒருவர் மறுபிறவி எடுப்பார் என கூறப்படுகிறது. தற்போதைய தலாய் லாமா, 14வது பிறவி எடுத்தவராக கடந்த 600 ஆண்டுகளாகத் தொடரும் அந்த மரபின் பிரதானமான பக்தி மையமாக உள்ளார்.

இந்நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அமெரிக்கா உள்பட உலக நாடுகள் பல வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், தலாய் லாமா மனித உரிமைகள், அமைதி மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கும் பணி செய்வதில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் என பாராட்டப்பட்டுள்ளது. அதில், திபெத்தியர்களின் மொழி, கலாசாரம் மற்றும் மத பாரம்பரியத்தை பாதுகாக்கும் அவர்களது முயற்சிகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த முன்னணி ஆன்மிக தலைவருக்கு இந்தியாவிலிருந்தும் பெரும் ஆதரவு வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தலாய் லாமாவின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “140 கோடி இந்தியர்களுடன் இணைந்து, தலாய் லாமாவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். அன்பு, இரக்கம், பொறுமை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றுக்கு அவர் நிலையான சின்னமாகத் திகழ்கிறார். அவரது நல்ல உடல்நலனுக்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்திக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாழ்த்து செய்தி திபெத்திய சமூகம் மற்றும் ஆன்மிக உலகில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் அவரது மதிப்பும், தாக்கமும் அதிகரித்து வருவதைக் குறிக்கும் விதமாக, இந்த பிறந்தநாள் விழா ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.