சென்னை: தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பின்பற்றப்படுகிறது. இந்தி திணிப்புக்கு பரவலான எதிர்ப்பு இருந்தாலும், அதைக் கற்க விரும்புபவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை.
அதனால் தமிழகத்தில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தென்னிந்தியாவில் இந்தி எழுத்தறிவு அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா இந்தி படிக்க விரும்புவோருக்கு பயிற்சி மற்றும் தேர்வை நடத்துகிறது.
இந்தியில் தேர்ச்சி பெற மொத்தம் 8 தேர்வுகள் தேவை. ஒவ்வொரு நிலையிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தி பிரச்சார சபை ஆண்டுக்கு இரண்டு முறை இந்தத் தேர்வுகளை நடத்துகிறது.
இதன் மூலம் இந்த ஆண்டு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து 4 லட்சத்து 73,650 பேர் இந்தி தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் தமிழகத்தில் இருந்து மட்டும் 3 லட்சத்து 54,655 பேர் தேர்வெழுதினர்.
அதேபோல், ஆந்திராவில் 1 லட்சத்து 4,959 பேரும், கர்நாடகாவில் 5,584 பேரும், கேரளாவில் 8,452 பேரும் தேர்வெழுதியுள்ளனர்.
மேலும், தமிழில் இருந்து ஹிந்தி கற்க விரும்புவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 5 சதவீதம் அதிகரித்து வருவதாக இத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.