தெலுங்கானா: திருமண வயதை எட்டிய இருவர் பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமல்ல என்றும் அது அவர்களின் ஒழுக்கத்தை தீர்மானிக்காது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தெலங்கானாவைச் சேர்ந்த கஜுலா திருபதி என்பவரின் காவலர் நியமன விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
திருமண வாக்குறுதி அளித்து உறவில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவரது காவலர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர் இருதரப்பினரும் சமரசம் செய்து கொண்ட நிலையில் அவர் நீதிமன்றத்தை அணுகினார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு, திருமண வயதை எட்டிய இருவர் பரஸ்பர சம்மதத்துடன் உறவில் ஈடுபடுவது குற்றமாக கருதப்பட முடியாது என்று தெரிவித்தது.
மேலும், உறவு திருமணத்தில் முடியவில்லை என்பதற்காக மட்டும் ஒருவர் மற்றவரை ஏமாற்றியதாக கருத முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.