இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், மைசூர் வளாகத்தில் பயிற்சி பெற்று வந்த 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நிலைமைக்கு எதிராக தொழிலாளர் சங்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளனர். இதனை கவனத்தில் கொண்ட மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம், கர்நாடக மாநில தொழிலாளர் துறைக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் பொதுவாக கல்லூரி இறுதியாண்டு மாணவர்களை கேம்பஸ் மூலம் தேர்வு செய்து பணி வாய்ப்பு வழங்குகிறது. இந்த புதிய ஊழியர்கள் முதலில் மைசூரில் உள்ள பயிற்சி வளாகத்தில் அடிப்படை பயிற்சி பெற்று, பின்னர் உள்மதிப்பீட்டு தேர்வுகளை எழுதுகிறார்கள். 2024 அக்டோபரில் இன்போசிஸ் நிறுவனத்தில் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயிற்சி முடிவடைந்த பிறகு நடத்தப்பட்ட தேர்வுகளில் தோல்வி அடைந்ததால், அவர்களை திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே ஐடி துறையில் வேலைநீக்கம் அதிகரித்து வரும் சூழலில், பயிற்சி முடியும் முன்பே இப்படி பணி நீக்கம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர் சங்கங்கள் இந்த முடிவுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம், கர்நாடக தொழிலாளர் துறைக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நீதி கிடைக்குமா என்பது எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.