மண்டியா; குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு கேஆர்எஸ் அணையில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குடகு, மைசூர், மாண்டியா போன்ற பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இதனால், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி மைசூருவின் கபினி அணைக்கு வினாடிக்கு 5,118 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதேபோல் மண்டியாவில் உள்ள கேஆர்எஸ் அணைக்கு வினாடிக்கு 6,146 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,972 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கேஆர்எஸ் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் விவசாயம் மற்றும் குடிநீருக்காக விஸ்வேஸ்வரய் கால்வாயில் திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் வலது, இடது கால்வாய்கள் வழியாக விரிஜா, சிக்கதேவராயசாகர், பங்காரத்தொட்டி, ராமசாமி, ராஜபரமேஸ்வரி வாய்க்கால்களுக்கும் சென்று சுற்றுவட்டார பகுதி விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
காவிரி நீர் வாரிய உதவி செயற்பொறியாளர் கிஷோர்குமார் கூறுகையில், ‘அடுத்த 15 நாட்களுக்கு தினமும் கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்,’ என்றார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.