லக்னோ: பிரயாக்ராஜில் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
2025-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்ப மேளா விழா நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தலைநகர் லக்னோவில் நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். அப்போது, மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, கூட்டத்தை கட்டுப்படுத்துதல், பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள், தங்கும் வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.
பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகளிடம் அவர் பேசியதாவது:-
கும்பமேளா நாட்டின் வளமான மத மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கும், உலகத்திற்கும் இடையே பாலமாக உள்ளது. எனவே, இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் தூய்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவது அவசியம்.
இந்த கும்பமேளா விழா உத்தரபிரதேசம் மற்றும் பிராண்ட் இந்தியாவை ஊக்குவிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை கட்டுப்படுத்துவது போலீசாருக்கு சவாலான பணியாக இருக்கும்.
எனவே, இப்பணிகளுக்கு போலீசார் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இந்த நிகழ்வின் போது, அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டும். இதற்கு AI கருவிகளை போலீசார் பயன்படுத்தலாம்.
இதற்கான விரிவான திட்டங்களை போலீசார் வகுக்க வேண்டும். AI கருவிகள் மூலம் பக்தர்களை காவல்துறை எளிதாகக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். விழாவுக்கு வரும் பக்தர்களிடம் போலீசார் கனிவாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பக்தர்களின் வசதிக்காக பிரயாக் ராஜ் பகுதியில் 1.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்படும். மேலும், திருவிழாவின் போது 10,000 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றுவார்கள்.