சென்னை: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சமீபத்திய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.ம.மு.க. நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு திருச்சி, தேனி ஆகிய 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டார்.
ஆனால், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று சென்னை அடையாறில் உள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்றார்.
இருவரும் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கும் போது, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா, ‘இனி நான் சும்மா இருக்க மாட்டேன். அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நான் அரசியலுக்கு வரப் போகிறேன் என்றார்.
இந்நிலையில், சசிகலாவின் கருத்தை ஆமோதித்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு குறித்தும், அ.தி.மு.க.வை மீட்டெடுப்பது குறித்தும் சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வு ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாத நிலையில், பா.ஜ.க. கூட்டணி அவர்களுக்கு சாதகமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
எனவே, அ.தி.மு.க., ஓட்டுகளை, தன் போட்டி கட்சியான, பா.ம.க.,வுக்கு திருப்பி, வெற்றி பெற, வியூகங்களை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம், இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரிக்கை போன்ற அம்சங்களும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.