சென்னை: எழுத்தாளர், விடுதலை போராட்ட வீரர் என்று பன்முகத் தன்மை கொண்ட சிலம்புச்செல்வர் மபொசியின் பிறந்தநாளில் அவரைப்பற்றிய தகவல்களை அறிந்து கொள்வோம்.
மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்ற பெயரின் சுருக்கம்தான் ம.பொ.சி என்பதாகும். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஜூன் 26ஆம் தேதி 1906ஆம் ஆண்டு பிறந்த மபொசி குடும்ப வறுமை காரணமாக 3ஆம் வகுப்போடு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அச்சகம் ஒன்றில் வேலை செய்யத் தொடங்கினார்.
அச்சுக்கோர்க்கும் போது தமிழ் எழுத்துக்களை கூட்டி சரளமாக வாசிக்க கற்றுக் கொண்ட மபொசிக்கு தமிழ் பற்றும் தேசப்பற்றும் ஒருங்கே இணையத் தொடங்கியது. காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து விடுதலை கேட்டு சொற்பொழிவு ஆற்றியதற்காக 700 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த மபொசி தனது சிறைப்பொழுதுகளை தமிழ் இலக்கிய நூல்கள் உடன் கழித்தார்.
சிறை நாட்களில் சிலப்பதிகாரத்தை கற்றுத் தேர்ந்து புலமை பெற்றதால் பின்னாட்களில் சிலம்பு செல்வர் என்று அழைக்கப்பட்டார். 1945ஆம் ஆண்டு தமிழ் முரசு என மாத இதழை தொடங்கிய அவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு புதிய தமிழகம் என்றும் கருத்தாக்கத்தை தனது இதழ் மூலம் பரப்புரை மேற்கொள்ளத்தொடங்கினார்.
சுதந்திர இந்தியாவில் சுதந்திர தமிழரசு வேண்டும் என்பது மபொசியின் எண்ணமாக இருந்தது. சுயநிர்ணய உரிமை கொண்டு தற்போதுள்ள தமிழ்நாடு, கேரளாவின் திருவிதாங்கூர், கர்நாடகாவின் கோலார் தங்கவயல், பிரஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரி, காரைக்கால், ஆந்திராவில் தற்போதுள்ள சித்தூர், இலங்கையில் உள்ள யாழ்பாணம் உள்ளிட்ட பகுதிகளை தமிழர் தாய் நிலங்களாக உள்ளடக்கி தமிழர் தாயகத்தை அமைக்கும் நோக்குடன் 1946ஆம் ஆண்டு நவம்பர் 21ஃஅம் நாளில் ’தமிழரசு கழகம்’ என புதிய இயக்கத்தை மபொசி தொடங்கினார்.
1954ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மபொசி, ’மதராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை தமிழ்நாடு என வைக்க கோரி போராட்டங்களை நடத்தினார். மொழிவாரி மாநில பிரிப்பின் போது ‘மதராஸ் மனதே’ என முழக்கத்துடன் ஆந்திரர்கள் சென்னை நகரை கேட்டபோது அதற்கு எதிராக போராடினார். திருப்பதி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் ஆந்திரத்துடன் இணைக்கப்பட்ட நிலையில் ‘மாலவன் குன்றம் போனால் என்ன வேலவன் குன்றத்தையாவது மீட்போம்’ என முழக்கத்துடன் வடக்கெல்லை போராட்டத்தை மபொசி முன்னெடுத்ததன் விளைவாக திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது.
கன்னியாகுமரி, பீர்மேடு, தேவிகுளம் ஆகிய பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டத்தை எதிர்த்தும் மபொசி போராட்டங்களை முன்னெடுத்தார். சிலப்பதிகாரத்தின் புகழை மக்களுக்கு எடுத்து சொல்வதில் மபொசியின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் மேல் கொண்ட பற்றுதல் காரணமாக தனது மகளுக்கு கண்ணகி, மாதவி என பெயர் சூடினார்.
சிலப்பதிகாரமும் தமிழரும், கண்ணகி வழிபாடு, இளங்கோவின் சிலம்பு, வீரக்கண்ணகி, நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம், மாதவியின் மாண்பு, கோவலன் குற்றவாளியா? என்பன உள்ளிட்ட 10க்கும் ஏற்பட்ட தலைப்புகளில் சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை விளக்கி நூல்களை மபொசி இயற்றி உள்ளார்.
மேலும் விடுதலை போராட்ட வீரர்களான வ.உ.சி, கட்டபொம்மன் உள்ளிட்டோர் குறித்தும் திருவள்ளுவர், வள்ளலார் குறித்தும் நூல்களை மபொசி எழுதி வெளியிட்டார். மபொசியின் தமிழ்ப்பணிகளுக்காக அண்ணாமலை பல்கலைக்கழகம் அவருக்கு ’டாக்டர்’ பட்டம் வழங்கியது. மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவப்படுத்தியது.
தமிழக மேலவையின் தலைவராகவும் பணியாற்றி உள்ள மபொசி 1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி காலமானார். பத்திரிக்கையாளர், எழுத்தாளர், விடுதலைப்போராட்ட வீரர், தமிழ்த்தேசிய சிந்தனையாளர் என பன்முகத் தன்மை கொண்ட மபொசிக்கு சென்னை தி.நகரில் உள்ள பாண்டிபஜார் சந்திப்பில் முழு உருவ சிலை வைக்கப்பட்டுள்ளதுடன் அவரது நூல்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.