கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில், இந்து மக்கள் கட்சி சார்பில் முருக பக்தர்களின் சூரசம்ஹாரம் மாநாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற கருத்தரங்குக்கு, கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில், சொக்கபுர ஆதீனம் ஸ்ரீகாரியம் தம்புரான் சுவாமிகள், இலங்கை மருங்குளம் சச்சிதானந்தம், இந்து மக்கள் கட்சி சித்தர் பேரவையின் அண்ணாமலை சித்தர், நடிகர்கள் கஞ்சா கருப்பு, வையாபுரி, திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியது: அறநிலையத் துறை சார்பில், கோயில்களில் இந்து சமய மாநாடு நடத்துவது வரவேற்கத்தக்கது. பழநியில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டின் பொறுப்பாளரான சுகி.சிவம், குழப்பமான கருத்துகளை தெரிவித்து வருகிறார். கந்தசஷ்டி கவசம், திருப்புகழ் போன்றவற்றை பாடப் புத்தகங்களில் இடம்பெற செய்ய வேண்டும்.
முருகனின் ஆறுபடை வீடுகளை திருப்பதிக்கு நிகராக மேம்படுத்த வேண்டும். கோயில்களில் பக்தர்களிடம் கட்டணங்கள் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். திருத்தணியில் டிசம்பர் 6-ம் தேதி முருக பக்தர்களின் 2- வது மாநாட்டை நடத்த உள்ளோம்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக ஆளுநர், இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பட்டியலின மக்களை தவறாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி, விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.