சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆகஸ்ட் 3ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்குக் காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பெய்த கனமழை சற்று ஓய்ந்துள்ளது. இருப்பினும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது. இது அடுத்த சில நாட்களுக்கு தொடரும்.
இந்நிலையில், இன்று முதல் ஜூலை 30-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். வலுவான காற்று மணிக்கு 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இதேபோல் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஆகஸ்ட் 3ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில், மணிக்கு 55 கி.மீ., வேகத்தில்; சில நேரங்களில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.