தமிழகத்தில் ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேரும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை-19) உத்தரவிட்டுள்ளது.
இடமாற்றச் சான்றிதழில் (டிசி) பள்ளிக் கட்டணத்தை செலுத்தாதது அல்லது தாமதமாக செலுத்துவது தொடர்பாக பள்ளி நிர்வாகங்கள் தேவையற்ற பதிவுகள் செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
மீறும் பட்சத்தில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009ன் பிரிவு 17ன்படியும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான பொருந்தக்கூடிய சட்டங்களின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான தமிழ்நாடு கல்வி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மறுஆய்வு செய்து, மூன்று மாதங்களுக்குள் RTE சட்டத்தின் விதிகளின்படி தேவையான அனைத்து திருத்தங்களையும் செய்யுமாறு மாநில அரசுக்கு பெஞ்ச் உத்தரவிட்டது.