சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருநெல்வேலி, கோவை ஆகிய மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், குமரி கடல், வங்கக் கடல், மத்திய மேற்கு அரபிக் கடல், கேரளக் கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுகளில் இன்று முதல் 15ஆம் தேதி வரை மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி, கொடைக்கானல் படகு கிராமம், வேலூர் மாவட்டம் காட்பாடி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.