சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025 – 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை (21.03.2025) நடைபெற்றது. அப்போது பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த், சென்னை மாநகராட்சிக்கு வருவாய் பற்றாக்குறையில் முரண்பாடு உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு மேயர் பிரியா பதிலளித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் பேசுகையில், “சென்னை மாநகராட்சிக்கு வருவாய் பற்றாக்குறையில் முரண்பாடு உள்ளது. கடந்த ஆண்டு பள்ளிகளுக்கு வாங்கப்பட்ட கேமராக்களில் ஒரு கேமராவி்ன் விலை ரூ.60 ஆயிரம் எனவும் தற்போது அது ரூ.84 ஆயிரம் என அதிகரித்துள்ளது. அதற்கு என்ன காரணம்? என தெரியவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “கடன் வட்டி தொகை பெரிதாக உள்ளது. அதே போல, வார்டு அடிப்படையில் வருவாய் தேவைகளை கொண்டு செலவினங்களை மாமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கலாம் என பரிந்துரை செய்கிறேன்” என உமா ஆனந்த் கூறினார்.
பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்த்தின் பேச்சுக்கு மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதற்கு, உமா ஆனந்த், “வாயால் வடை சுடுவது தான் திராவிடம்” என கடுமையாக விமர்சித்தார். மேலும், ஜி.எஸ்.டி விவகாரம் தொடர்பாக நாளை சென்னை வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தான் சந்திக்க உள்ளதாகக் கூறிய உமா ஆனந்த், “நிதி அமைச்சர் பங்கு பெறும் கூட்டத்தில் அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கு பெற வேண்டும். அந்த நிகழ்வில் பங்கு கொள்ளாமலேயே தொடர்ந்து தவறான தகவல்களை அவையில் கொடுத்து வருகிறார்கள். மத்திய அரசு நிதி கொடுத்திருக்கிறது; ஆனால், நிதி கொடுக்கவில்லை என தவறான தகவலை அவர்கள் கொடுத்து வருகிறார்கள்” என்று கூறினார்.
பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்த்தின் கேள்விகளுக்கு நிதிநிலைக் குழு தலைவர் சர்ப ஜெயாதாள் விளக்கம் அளித்து பேசினார். “2021-ம் ஆண்டு மாநராட்சியின் கடன் ரூ.1,200 கோடியாக இருந்தது. 2024-ம் ஆண்டு வரை ரூ.912 கோடி கடன் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.1,026 கோடி கடன் உள்ளது. புதிய திட்டத்திற்காக வாங்கப்பட்ட கடன் தொகை 720 கோடி ரூபாய் என மொத்தமாக சென்னை மாநகராட்சிக்கு 1,746 கோடி கடன் உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்துப் பேசிய பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்த், “சென்னை மாநகராட்சி பட்ஜெட், நிதி பற்றாக்குறை பட்ஜட்டாக உள்ளது என குற்றச்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, “ஆண்டுதோறும் 6% சொத்து வரி உயர்த்தினால் மட்டுமே நிதி வழங்கப்படும் என மத்திய அரசு சொல்கிறது. இதனால், மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். சென்னை மாநகராட்சியில் 6% சொத்து வரி உயர்த்தி ஆவணங்களை சமர்பித்து இருந்தாலும் தற்போது வரை சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ. 350 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கவில்லை” என பதிலடி கொடுத்தார்.