பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரூ.53.79 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவுவாயில் மற்றும் ரூ.51.55 லட்சம் மதிப்பிலான இராக்கால நந்தவனத்தை அமைச்சர் ரமேஷ் திறந்து வைத்து, பெருந்திட்ட வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
கொடைக்கானல் சாலை சந்திப்பில் ரூ.53.79 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவுவாயிலை திறந்து வைத்த அவர், மேற்கு கிரிவீதியில் ரூ.51.55 லட்சம் மதிப்பில் 50 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைக்கப்பட்ட இராக்கால நந்தவனத்தையும் திறந்து வைத்தார்.
தொடர்ந்து மின்இழுவை நிலையம், பக்தர்கள் தங்கும் விடுதிகள், காத்திருப்போர் கூடம், பஞ்சாமிர்தம் மற்றும் பிரசாத தயாரிப்பு நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் புதிய அன்னதானக் கூடம், அதிஉயர நிழல் மண்டபம், கிரிவீதி சுற்றுச்சுவர் உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்து, கிரிவீதியில் மரக்கன்றுகளுக்கான சொட்டு நீர் பாசன பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவாக செய்து தரப்பட வேண்டும் என்றும், இலவச தரிசன பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.