மேட்டுப்பாளையம்: பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணை தொடர்ந்து 4வது நாளாக நிரம்பி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா பில்லூர் வனப்பகுதியில் 100 அடி உயரத்தில் பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது.
அணையின் பாதுகாப்பு நலன் கருதி அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயரும் போது அணை நிரம்பியதாக அறிவித்து அணைக்கு வரும் தண்ணீர் முழுவதையும் பவானி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கடந்த 16ம் தேதி பில்லூர் அணை நிரம்பியது.
அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் அடிக்கு குறையாமல் உள்ளது. பில்லூர் அணை ஏற்கனவே நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு அவலாஞ்சியில் 216 மி.மீ., மேல் பவானியில் 120 மி.மீ., குந்தாவில் 42 மி.மீ., பரளியில் 11 மி.மீ., பில்லூர் அணையில் 7 மி.மீ., மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 160 கனஅடி தண்ணீர் வந்துள்ளது. இதன் காரணமாக பில்லூர் அணை நான்காவது நாளாக நிரம்பி வழிகிறது. மேலும், நான்காவது நாளாக பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.