தஞ்சாவூர்: ஆவணம் – பெரியநாயகிபுரம் நியாய விலைக்கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அமைப்பின் செயலாளர் மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ், துணைச் செயலாளர் அஷ்ரப் அலி, கிளைப் பொறுப்பாளர் அப்துல்லா மற்றும் இனாமுல் ஹசன் ஆகியோர் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமாரை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
“பேராவூரணி வட்டம், ஆவணம் பெரியநாயகிபுரம் ஊராட்சியில், பள்ளிவாசல் கட்டிடத்தில் நியாய விலைக் கடை பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு அரசு இடத்தில் புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வட்ட வழங்கல் அலுவலர் இடத்தை ஆய்வு செய்து விட்டு சென்று நான்காண்டுகளை கடந்த நிலையில் இன்னும் பணிகள் துவங்கவில்லை. எனவே, நியாய விலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும்.
மேலும், தெருநாய்களை கட்டுப்படுத்த, விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு மையம், ஆவணம் கிராமத்தில் அமைக்க கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு போதிய இடம் ஆவணம்-பெரியநாயகிபுரம் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட கால்நடை மருத்துவமனையில் உள்ளது. எனவே, விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது_