நாட்டில் உள்ள அனைவருக்கும் அத்தியாவசிய அடிப்படை அடையாள அட்டைகளில் நல்ல ஒன்றாக ரேஷன் கார்டு இருக்கிறது. குறிப்பாக ரேஷன் கார்டு வைத்து தான் அரசின் அனைத்து சலுகைகளையும் பெற முடியும். அந்த வகையில் புதிதாக ரேஷன் கார்டு எளிய முறையில் விண்ணப்பிப்பது எப்படி? எந்த அலுவலரை அணுக வேண்டும், தேவையான ஆவணங்கள் என்னென்ன? ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ரேஷன் கார்டு விண்ணப்பிக்க முடியுமா என்று பல்வேறு சந்தேகங்கள் பலருக்கு இருந்து வருகிறது..
இந்த அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கும் செய்தி தொகுப்பை விரிவாக பார்க்கலாம். புதிய ரேஷன் கார்டு எளிய முறையில் நீங்களே விண்ணப்பிக்கலாம் அதாவது விண்ணப்பிக்க, முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்யவும் இப்போது திரையில் ஒரு படிவம் தோன்றும். அந்த படிவத்தை பயனாளிகள் நிரப்ப வேண்டும்.
அனைத்து தகவல்களையும் நிரப்பிய பின்னர், அதனுடன் நீங்கள் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும். நீங்கள் இணைக்கும் ஆவணத்தின் அளவு 1.0 MB அளவிலும், png, gif, jpeg, pdf ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஃபார்மெட்டிலும் இருத்தல் வேண்டும். பின்னர் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்புகள் எத்தனை உள்ளது போன்ற தகவல்களை வழங்க வேண்டும். பின்னர் நீங்கள் ‘உறுதிபடுத்து’ என்பதை கிளிக் செய்ய வேண்டும் கிளிக் செய்த பிறகு உங்களுக்கு ஒரு (reference) எண் கிடைக்கும், அதை பத்திரமாகக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து, நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் மற்றும் விவரங்களை துறை சார்ந்த அலுவலர்கள் சரிபார்ப்பார்கள். சரிபார்ப்பு முடிந்ததும், உங்கள் ரேஷன் கார்டு உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். ரேஷன் கார்டு படிவம் சரிபார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றால், தேவையான ஆவணங்களை கேட்டறிந்து சமர்பிக்க வேண்டும். ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, மின் ரசீது, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக், சாதி சான்றிதழ் ஆகியவை ஆகும். புதிதாக திருமணம் ஆனவர்கள் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க ஏற்கனவே உள்ள குடும்ப அட்டையில் தங்களது பெயரை நீக்கம் செய்துவிட்டு அதன் பின்னர் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் ஆதார் அப்டேட் செய்த பின்னர் ஆதார் அட்டையை ஆவணமாக பயன்படுத்தி புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க முடியும்.