இந்திய அணி பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக டிராவிட் அறிவிக்கப்பட்டார்
இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமித்துள்ளது பிசிசிஐ. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் மீதுள்ள எதிர்பார்ப்பை விட இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பதை அறிய தான் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். புதிய பயிற்சியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக பிசிசிஐ முழு வீச்சில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்தது. இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி கடந்த 2017ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகும் கோலியின் வேண்டுகோளுக்கு ஏற்ப மீண்டும் அவரையே பயிற்சியாளராக நியமித்தது பிசிசிஐ.
ஆனால் அவரால் இந்திய அணிக்கு ஒரு ஐசிசி கோப்பையை கூட வாங்கித் தரமுடியவில்லை. இதனால் அவரை மீண்டும் பயிற்சியாளராக்க பிசிசிஐ விரும்பவில்லை. டி20 உலகக்கோப்பை தொடருடன் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனையடுத்து இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்தனே, ஆஸ்திரேலியவைச் சேர்ந்த ரிக்கி பாண்டிங் உள்ளிட்டவர்களுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்தது. இறுதியில் இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை அணுகி பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் விவரம் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் ராகுல் டிராவிட் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தான் பயிற்சியாளராக இருப்பேன் எனத் தெரிவித்ததாகவும், அதன்படி அவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில், தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பதில் பெருமை கொள்கிறேன். இந்திய அணியின் போட்டிகளுக்காக எதிர்நோக்கி காத்துள்ளேன். ரவிசாஸ்திரிக்கு கீழ் தற்போது இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் பல வீரர்களுடன் பழகியுள்ளேன். அடுத்த 2 ஆண்டுகளில் பல்வேறு போட்டிகள் உள்ளன. அதனை எதிர்நோக்கியுள்ளேன் என்றார்.