மனைவி, மகள், மகனின் தவிப்பு… ஆட்டோவில் விளம்பரம்

வாழப்பாடி: கடந்த 19 நாள்களாக கணவரை காணவில்லை என ஆட்டோவில் புகைப்படம் வைத்து விளம்பரப்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கி கிராமம் கிராமமாக மனைவி மற்றும் மகள், மகனும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ வைத்து வருகிறது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டி ஊராட்சியில் முத்தம்பட்டிகேட் மாரியம்மன் கோயில் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மகன் சிவராமன்(44). இவர் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்து வரும் வேலை பார்த்து வந்தவர், இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், கலைவாணி (18) என்று கல்லூரி மாணவியும், ஹரிகரன் (16) என்ற மகனும் உள்ளனர்,
சிவராமன் கடந்த 7-ஆம் தேதி தனது வீட்டிலிருந்து வாழப்பாடி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை, தனது கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மனைவி பழனியம்மாள் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் பல்வேறு இடங்களில் விசாரித்து தேடியுள்ளார், எங்கும் கிடைக்காததால் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தரும்படி வாழப்பாடி போலீஸில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமா சங்கர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது நாள் வரையும் 19 நாள்கள் ஆகியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் காணாமல் போன கணவரை தேடி ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து ஒலிபெருக்கி மூலமாக முத்தம்பட்டி நீர்முள்ளிகுட்டை, சிங்கிபுரம், அயோத்தியாபட்டணம் வலசையூர் குள்ளம்பட்டி உள்பட கிராமம் கிராமமாகச் சென்று தனது கணவரை தேடும் பணியில் ஈடுபட்டு துண்டு பிரசுரங்களை விநியோகித்து தனது கணவரை தேடி வருகிறார் மனைவி பழனியம்மாள். இது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.