சென்னை: ஒரு தனிமையான அமைதியான மாசுபடாத கடற்கரைச்சூழலை தேடும் பட்சத்தில், நீங்கள் செல்ல வேண்டிய இடம் அந்தமான் நிகோபார் தீவுகள் அன்றி வேறில்லை. வாழ்வில் ஒரு முறையாவது இந்தியப்பயணிகள் விஜயம் செய்யவேண்டிய தீவுச்சொர்க்கமே இந்த அந்தமான் தீவுப்பிரதேசம்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் நிலப்பகுதியை விட்டு விலகி தென்கோடியில் வங்காளவிரிகுடாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய இந்திய யூனியன் (தீவு) பிரதேசமாகும். சுமார் 8000 ச.கி.மீக்கும் மேற்பட்ட பரப்பளவைக் கொண்டிருக்கும் இந்த தீவுகளில் மனித சுரண்டலுக்கு உட்படாத இயற்கை வளம் நிரம்பி வழிகிறது.
இந்த இந்திய யூனியன் பிரதேசமானது ‘அந்தமான்’ மற்றும் ‘நிக்கோபார்’ என்ற இரண்டு தனித்தனியான -10 டிகிரி வடக்கு அட்ச ரேகையால் பிரிக்கப்பட்ட – தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமான போர்ட் பிளேர் நகரம் முக்கிய போக்குவரத்து இணைப்பான விமான நிலையத்தை கொண்டுள்ளதுடன், இந்த தீவுப்பகுதியிலேயே அதிகமான மக்கள் வசிக்கும் இடமாகவும் விளங்குகிறது.
போர்ட் பிளேர் நகரத்திலிருந்து மற்ற சிறு தீவுகளுக்கு விஜயம் செய்ய பலவிதமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. கடலுக்கடியில் வீற்றிருக்கும் ஒரு பெரிய மலைத்தொடரின் வெளிநீட்சிகளே இந்த தீவுகள் என்பது ஒரு வியப்பூட்டும் புவியியல் உண்மையாகும். இந்த கடலடி மலைத்தொடர் அமைப்பு தெற்கு வடக்காக 800 கி.மீ நீளத்துக்கு நீண்டு அமைந்துள்ளது. விமானமார்க்கம் தவிர, சென்னை மற்றும் கல்கத்தா துறைமுகங்களிலிருந்து ‘ஃபெர்ரி’ எனப்படும் ‘சொகுசு பயணக்கப்பல்’ மூலமாகவும் போர்ட் பிளேர் நகரத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
அந்தமான் நிகோபார் தீவுகளின் விசேஷ அம்சங்கள் முடிவடையாது நீண்டு செல்லும் தூய்மையான வெண் மணற்கடற்கரைகள் அலட்டல்கள் அற்ற அமைதியோடு அந்தமான் நிகோபார் தீவுகளில் படர்ந்து கிடக்கின்றன. கடல் ஆழத்தில் மூழ்கி அற்புதக்காட்சிகளை தரிசிக்க உதவும் ‘ஸ்கூபா டைவிங்’ எனப்படும் அற்புதமான ‘கடலடி காட்சிப்பயணம்’, விதவிதமான தாவரங்கள் மற்றும் வித்தியாசமான உயிரினங்கள், எந்தவித செயற்கை அழகூட்டலும் செய்யப்படாமல் இயற்கையாகவே உருவாக்கப்பட்டிருக்கும் அழகு ஸ்தலங்கள் போன்றவை இந்த தீவுப்பகுதிகளில் உங்களை திக்குமுக்காட வைத்துவிடும் என்பதை நேரில் பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள்.