இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து வங்கிகளிலும் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில் உடனடியாக கையெழுத்திட வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகள், சொத்து ஆவணங்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை பாதுகாக்க லாக்கர் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைக்கு வங்கிகள் பராமரிப்பு கட்டணங்களையும் வசூலிக்கின்றன.

லாக்கர்களில் பாதுகாக்கப்படும் பொருட்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வங்கிகள் பாதுகாப்பு கேமரா, அலாரங்கள், பாதுகாப்பு அலுவலர்கள் போன்ற வசதிகளை செய்து வைத்துள்ளன.
ஆனால், ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறைப்படி, அனைத்து வாடிக்கையாளர்களும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், அவர்களது லாக்கர்கள் சீல் வைக்கப்படும் அபாயம் உள்ளது.
இதற்காக முதலில் 2023 டிசம்பர் மற்றும் பின்னர் 2024 மார்ச்சுக்குள் கையெழுத்திட முடிய வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. பலர் இதையும் பின்பற்றாததால் தற்போது டிசம்பர் 2025 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட இருக்கிறது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்குச் சென்று, புதிய ஒப்பந்தத்தில் உடனடியாக கையெழுத்திட வேண்டும். அதற்காக பான் கார்ட், ஆதார், பழைய ஒப்பந்த ஆவணங்கள் போன்றவை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
மேலும், இவ்வேளையில் வாடிக்கையாளர்கள் தங்கள் லாக்கர் கணக்கில் நாமினியை சேர்க்காதிருந்தால், அதை தற்போது செய்து கொள்ளலாம். இது எதிர்காலத்தில் உரிமை தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.
தங்கள் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டதா என்பதைத் தெரிந்துகொள்ள வங்கியை நேரில் தொடர்புகொண்டு உறுதிப்படுத்துங்கள். இதை அலட்சியப்படுத்தும் போது லாக்கர் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம்.