யுபிஐ (UPI) மூலம் தினசரி மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் தற்போது மக்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு, இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இன்று முதல் அமலுக்கு வரும் விதிமுறைகளின்படி, யுபிஐ பரிவர்த்தனை உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகத் துறையினருக்கு மிகப் பெரிய நன்மை கிடைக்கப் போகிறது.

புதிய விதிகளின்படி, காப்பீட்டு பிரீமியம் கட்டுதல், பங்கு சந்தையில் முதலீடு செய்தல், பயண முன்பதிவு செய்தல் போன்ற சேவைகளுக்கு ஒரே நாளில் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய முடியும். அதே சமயம், கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவதற்கான உச்சவரம்பு 6 லட்சமாகவும், கடன் மற்றும் மாத தவணை கட்டணங்களுக்கான வரம்பு 10 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் வசதியை வழங்குகிறது.
மேலும், நகைகள் வாங்குவதற்கான யுபிஐ வரம்பும் மாற்றப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 2 லட்சம் ரூபாய் வரை செலுத்தலாம், ஆனால் ஒரு நாளில் அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யலாம். அதேபோன்று, வங்கிக் கணக்குகளில் இருப்பு வைப்பதற்கான யுபிஐ உச்சவரம்பு 5 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனிநபர்கள் ஒருவருக்கொருவர் பணம் பரிமாறிக் கொள்வதற்கான வரம்பு மாற்றமின்றி 1 லட்சம் ரூபாயாகவே தொடர்கிறது.
இந்த புதிய மாற்றம் யுபிஐ வழியாக நடைபெறும் பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக காப்பீடு, முதலீடு, பயணம் மற்றும் நகை வணிகம் போன்ற துறைகளில் மக்கள் எளிதாகவும் விரைவாகவும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். டிஜிட்டல் இந்தியா நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த முடிவு செயல்படுகிறது.