நியாய விலைக் கடைகளில் நடைபெறும் முறைகேட்டினை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துவதில் நியாய விலைக் கடைகளும், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் ஆகியவை முக்கியப் பங்காற்றி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
உணவுப் பாதுகாப்பின் அங்கங்களாக திகழும் இவற்றில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வருகின்றன. ஓரிரு பொருட்களை வாங்கிச் செல்பவர்களின் கைபேசிகளுக்கும் அனைத்துப் பொருட்களையும் பெற்றுக் கொண்டதாக குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதன் மூலம் அந்தப் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளிலும், நியாய விலைக் கடைகளிலும் நடைபெறும் முறைகேட்டினை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, சரியான எடையுள்ள பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.