தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை என்ஜினீயர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 14 ஒன்றியங்களிலும் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை என்ஜினீயர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் இது தொடர்பான அறிவிப்பு பேனர்களும் வைக்கப்பட்டன.
அதன்படி இன்று என்ஜினீயர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் உள்ள 50-க்கும் மேற்பட்ட என்ஜினீயர்கள் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் கார்த்திகேயன் தலைமையில், மாவடட தலைவர் அய்யப்பன், செயலாளர் ஜெகோஸ்வா சில்வஸ்டார், பொருளாளர் மோகன்ராஜ், செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், பொறியியல் பிரிவில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஏற்கனவே உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களை அரசிற்கு ஒப்படைப்பு செய்ய கூடாது. மாவட்ட அளவிலான தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் உதவி செயற்பொறியாளர் தலைமையின் கீழ் அமைத்து தர வேண்டும். 2 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கூடுதலாக ஒரு உதவி செயற்பொறியாளர் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும்.
3 மாவட்டங்களுக்கு ஒரு மண்டல மேற்பார்வை பொறியாளர் பணியிடமும், கிராம பகுதிகளில் வீட்டு மனை மற்றும் புதிய கட்டடங்களுக்கான வரைபட ஒப்புதல் அளிக்க பொறியாளர் கட்டமைப்வும், 8 ஊராட்சிகளுக்கு ஒரு உதவிப் பொறியாளர் பணியிடமும் தோற்றுவிக்க வேண்டும், பெரிய மாவட்டங்களில் கூடுதலாக செயற்பொறியாளர் பணியிடமும், உதவிப் பொறியாளர் முதல் செயற்பொறியாளர் வரை அயற்பணியில் பணியாற்ற பொதுவான ஓர் வழிகாட்டி நெறிமுறையும் வகுக்க வேண்டும்.
ஒன்றியத்தில் பணிபுரியும் பணிப்பார்வையாளர்களில் ஒருவரை வட்டார இளநிலை வரை தொழில் அலுவலர் மற்றும் கிடங்கு பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். கிடங்கு பாதுகாவலருக்கு ஒன்றிய பொது நிதியில் ஊதியம் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. இந்த வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக 14 ஒன்றியங்களிலும் நடைபெறும் சாலை, கட்டிட பணி உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன.