வாஷிங்டன்: ‘ரஷ்யாவுடன் நட்பாக இருந்தாலும், இந்தியா எங்களின் சிறந்த நண்பர். அதில் நம்பிக்கை வையுங்கள். உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதையடுத்து, ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு அவர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அதே சமயம், இந்தப் பிரச்னையில் இந்தியா நடுநிலை வகிக்கிறது. ரஷ்யாவை கண்டிக்கவில்லை என்றாலும், உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனான தனது நட்பை அவர் பாராட்டினார். யுத்தத்தால் தீர்வு காண முடியாது; பேச்சின் மூலம் அமைதியை அடைய முடியும் என்று மோடி வலியுறுத்தினார்.
இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பேட் ரைடர் கூறியதாவது:
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் நீண்ட நட்பு வரலாறு உண்டு. அமெரிக்காவின் பார்வையில் இந்தியா எங்களின் மிக முக்கியமான நட்பு நாடு. ரஷ்யாவுடன் பேசினாலும் அது இந்தியா-அமெரிக்க உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது. சமீபத்தில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியையும் மோடி சந்தித்தார்.
அப்போது அவர், உக்ரைனில் அமைதியை மீட்டெடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதாக கூறினார். உக்ரைனில் அமைதி திரும்புவது குறித்தும் மோடி பேசினார். இவ்வாறு அவர் கூறினார்.
“இந்தியா-ரஷ்யா நட்புறவு தொடர்பான எங்களது கவலைகளை இந்தியாவிடம் தெரிவித்துள்ளோம். எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.