வாஷிங்டன்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றிய இந்திய வம்சாவளி ஆலோசகர் ஆஷ்லே டெல்லிஸ், ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்திருந்தது மற்றும் சீன அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்தது என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 64 வயதான அவர் மும்பையில் பிறந்தவர்; அமெரிக்க வெளியுறவு மற்றும் தெற்காசிய கொள்கை தொடர்பாக பல முக்கிய ஆலோசனைகள் வழங்கியவர் என அறியப்படுகிறார்.

அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாவது — விர்ஜினியா மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நீதிமன்ற அனுமதியுடன் சோதனை நடத்தப்பட்டபோது, ஆயிரம் பக்கங்களுக்கு மேலான தேசிய பாதுகாப்பு ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை மூன்று பெரிய கருப்பு பைகளில் பதுக்கப்பட்டிருந்தன. அதேசமயம், 2002 முதல் 2025 வரை அவர் சீன அதிகாரிகளை பல முறை சந்தித்ததாகவும், சமீபத்தில் அலெக்சாண்ட்ரியாவில் உள்ள ஒரு வளாகத்தில் ஆவணங்களை மறைத்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க வக்கீல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஆஷ்லே டெல்லிஸ் மீது அரசு ரகசியங்களை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2.2 கோடி அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆஷ்லே டெல்லிஸ், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சி காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர். இந்தியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்கு வகித்தவர் என கருதப்பட்டவர் என்பதால், இந்த கைது அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.