பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் போது ஏற்படும் வானியல் நிகழ்வு தான் ‘சூப்பர் மூன்’. இந்நிகழ்வு இந்திய நேரப்படி அக்டோபர் 6-ஆம் தேதி சூரியன் மறைந்த பிறகு நிகழ இருக்கிறது. இதனை எந்தவித சிறப்பு கருவிகளும் இன்றி கண்ணால் நேரடியாகக் காண முடியும் என்பது வானியல் நிபுணர்களின் தகவல்.
பூமி மற்றும் நிலவு இடையிலான சராசரி தூரம் 3.84 லட்சம் கிலோமீட்டர். ஆனால் நிலவு சில நேரங்களில் பூமிக்கு 3.56 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு மிக அருகில் வரும் போது, வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளியுடனும் தோன்றும். இதுவே ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது.

நாசா வெளியிட்ட தகவல்படி, இந்த முறை காணப்படும் சூப்பர் மூன் வழக்கத்தை விட சிறிது பெரியதாகவும் பிரகாசமாகவும் இருக்கும். இந்த முழுநிலவின் ஒளி விவசாயிகளுக்கு இரவிலும் பணி செய்ய ஏற்றதாக இருக்கும் என்பதால் இதனை “அறுவடை முழுநிலவு” என்றும் குறிப்பிடுகிறார்கள். இதன் பெயர் நாட்டுப்புற மரபு கதைகளில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அனைத்து பவுர்ணமிகளிலும் சூப்பர் மூன் நிகழாது. ஆனால் இந்த முறை நிகழும் சூப்பர் மூன் வானத்தை முழுவதும் ஒளிரச்செய்யும் வானியல் அதிசயமாக இருக்கும். இதனை தவறாமல் அனைவரும் காண வானியலாளர் பரிந்துரைத்துள்ளனர். அடுத்த சூப்பர் மூன் 2025 நவம்பர் 7 மற்றும் டிசம்பர் 4-ல் நடைபெறும் என்று நாசா தெரிவித்துள்ளது.