வேல்ஸ்: மக்கள் தொகை குறைவடைந்து வரும் சூழலில், ரஷ்ய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கு குழந்தை பெற்றெடுத்து வளர்க்கும் முயற்சிக்காக ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் 10 மாகாணங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இதுவே மிகக் குறைந்த பிறப்பு விகிதமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் பொருளாதார சிக்கல், குடும்ப அமைப்பு மாறுதல், கலாசார மாற்றங்கள் போன்ற காரணங்களால் பிறப்புவிகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. சீனாவே உலக மக்கள் தொகையில் முன்னிலை வகித்தபோதும் தற்போது பின்தங்கியுள்ள நிலை ஏற்பட்டுவிட்டது. சீனா, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளும் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் தொகையை உயர்த்துவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்கின்றன.
ரஷ்யா தற்போது வழங்கும் உதவித் தொகையை 43 சதவீத ரஷ்ய குடிமக்கள் ஆதரிக்கின்றனர். மாணவியருக்கு குழந்தை பெற்றால் அரசு நேரடியாக பண உதவியை வழங்கும் திட்டம், எதிர்காலம் குறித்த கவலையில் உள்ள சமூகத்திற்குள் விவாதங்களை தூண்டியிருக்கிறது. இந்த முயற்சி, குறைந்த பிறப்புவிகிதத்தை சமாளிக்க தேவையான தீர்வாக அரசால் காணப்படுகிறது என்றாலும், சமூக ரீதியாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.
ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் அதன் விளைவுகள், நாட்டின் மக்கள் தொகையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போரால் மட்டுமல்ல, உயர்ந்த கல்வி பெற்ற ரஷ்யர்கள் லட்சக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேறியதாலும், உள்ளூர் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய அரசு எடுத்துள்ள இந்த கொள்கை, நாட்டின் நீண்ட கால வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவும், சமூக கட்டமைப்பை மாற்றும் முன்முயற்சியாகவும் கருதப்படுகிறது.