மேற்கு ஆப்ரிக்காவின் மாலி நாட்டில் கடந்த சில நாட்களாக அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜூலை 1ம் தேதி மாலியில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கு பணியாற்றி வந்த நம் நாட்டைச் சேர்ந்த மூன்று ஊழியர்களை கடத்திச் சென்றனர். அவர்களில் ஒருவரின் அடையாளம் தற்போது உறுதியாகியுள்ளது.
கடத்தப்பட்ட இந்தியர்களில் ஒருவர், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர். அவருக்கு வயது 28. மும்பையில் உள்ள ‘ப்ளூ ஸ்டார் பிரைவேட் லிமிடெட்’ எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், சுமார் ஆறு மாதங்களுக்கு முன் வேலைக்காக மாலிக்கு அனுப்பப்பட்டார். தற்போதைய தகவல்களின் அடிப்படையில், வெங்கட்ராமனின் குடும்பம், குறிப்பாக அவரது தாயார் நரசம்மா, மகனை தொடர்பு கொள்ள முடியாததால் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த கடத்தல் விவகாரம் வெளிச்சத்துக்குவந்தது.
வெங்கட்ராமனை தவிர மற்ற இரண்டு இந்தியர்களின் அடையாளங்கள் இதுவரை வெளிவரவில்லை. அவர்களும் இந்தியர்களே என உறுதியாகத் தெரிந்திருந்தாலும், அவர்களது விபரங்களை மாலி அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் இதுவரை பகிரவில்லை. இது குடும்பங்களிடையே மேலும் பதற்றத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், மூவரையும் பாதுகாப்பாக மீட்டெடுக்க வேண்டிய அவசியம் தேசிய மட்டத்தில் உருவாகியுள்ளது. இதற்காக, இந்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாலி அரசுடன் தொடர்பில் இருந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தாக்குதல்களால் பதற்றம் நிலவும் மாலி நாட்டில், இந்தியர் கடத்தப்பட்ட சம்பவம் கவலையூட்டுவதுடன், பாதுகாப்பு சவால்களையும் முன்வைக்கிறது.