சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், 6 பெட்டிகளுடன் 28 புதிய ரயில்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை 2 வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீ. தூரத்திற்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் தினமும் சராசரியாக 2.70 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். மெட்ரோ ரயில்களில் காலை, மாலை, விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்துள்ளது.
இதையடுத்து, 6 பெட்டிகள் கொண்ட புதிய மெட்ரோ ரயில்கள் வாங்க திட்டமிடப்பட்டது. அதன் ஒப்புதலுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியது. தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த யோசனைக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், புதிய மெட்ரோ ரயில்களை வாங்க நிதி ஆயோக் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின், ரயில்கள் கொள்முதல் செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் சித்திக் கூறியதாவது: தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில்களால், ஒன்றரை ஆண்டுகள் வரை பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். அதன்பிறகு, புதிய ரயில்களை வாங்கி இயக்க வேண்டியது அவசியம்.
எனவே, 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய ரயில்களை வாங்க முயற்சி செய்துள்ளோம். தற்போது நிதி ஆயோக் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கிறோம், என்றார். தலா 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்கள் மொத்தம் ரூ.2,820.90 கோடியில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து நிதி பெறப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.