இயக்குநராக மாறி, தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா, ஹோட்டலில் வேலை பார்த்துவிட்டு லயோலா கல்லூரியில் சினிமா படிப்பை முடித்தவர். ஹீரோவாக சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இருந்த எஸ்.ஜே.சூர்யா பண நெருக்கடியால் உதவி இயக்குனராக படங்களில் பணியாற்றத் தொடங்கினார்.
பாக்யராஜ், பாரதி ராஜா, வசந்த் போன்ற முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றியபோது,‘கிழக்கு சீமையிலே’, ‘ஆசை’ போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து 1999-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த படம் ‘வாலி’. இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் பணியாற்றிய எஸ்.ஜே.சூர்யா, அப்போது மிகக் குறைந்த சம்பளம் பெற்று, தனது அடுத்த படமான குஷியை இயக்க சில லட்சங்களை சம்பளமாக பெற்றார். குஷி படத்தின் அட்வான்ஸைப் பெற்று, தன்னிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆவதற்கு முயற்சித்த ஏழு உதவி இயக்குநர்களுக்கு பைக் வாங்கிக் கொடுத்தார். அதில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒருவர் என்றும், அந்த பைக்கை தற்போது வரை ஏ.ஆர்.முருகதாஸ் பத்திரமாக வைத்திருப்பதாகவும் மறைந்த நடிகர் மாரி முத்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
எஸ்.ஜே.சூர்யாவிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நடிகர் மெதுவாக வெளியே வர… அவரே இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘நியூ’. தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
ஒரு கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா, தான் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதபோது, கெஸ்ட் ரோலில் மட்டும் தலை காட்டினார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளியான ‘இறைவி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதையடுத்து எஸ்.ஜே.சூர்யா பல படங்களில் நடிக்க கமிட்டானார்.
ஸ்பைடர் படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார். தற்போது ஹீரோ, வில்லன் கேரக்டரில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, எந்த கேரக்டருக்கும் பொருந்துகிற ஆளுமை, மேலும் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார்.மேலும் இந்தியன் 3 படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதுதவிர விரைவில் வெளியாகவுள்ள ராயன், கேம் சேஞ்சர், லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், வீர தீர சூரன், என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இன்று 56வது பிறந்தநாளை கொண்டாடும் எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி இறைவி படத்திற்கு பிறகு கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிக்கும் படங்களுக்கு 5 கோடி முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.இதுமட்டுமின்றி சென்னையில் சொந்த வீடும், அடுக்குமாடி குடியிருப்பும் உள்ளது. சொந்த ஊரில் பல இடங்களை வாங்கிய எஸ்.ஜே.சூர்யா, தனது சகோதரி செல்விக்காக பிரமாண்டமான பங்களாவையும் கட்டியுள்ளார்.
BMW Z4 Roadster Melbourne Red என்ற சொகுசு கார் உட்பட 3 சொகுசு கார்கள் அவரிடம் இருப்பதாக கூறப்படுகிறது. தன்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டி வரும் எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு 150 கோடி என கூறப்படுகிறது.