சென்னை: காஞ்சிபுரம் வல்லம் வடகாலில் சிப்காட் நிறுவனத்தின் 18,720 பெண்கள் தங்கும் வகையிலான புதிய மெகா ஹாஸ்டலை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து ரூ.706 கோடியில் கட்டப்பட்ட இந்த ஹாஸ்டல், 13 தொகுதிகள் மற்றும் 10 மாடிகள் கொண்டதாகும்.
விழாவில் ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு மற்றும் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, தாமோ அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த புதிய குடியிருப்பில் ஒவ்வொரு தொகுதியிலும் 240 அறைகள் உள்ளன, மொத்தமாக 3120 அறைகள் உள்ளன.
இந்த ஹாஸ்டலுக்கான வசதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 1170 சிசிடிவி கேமராக்கள், சோலார் வாட்டர் ஹீட்டர்கள், விளையாட்டு அரங்கங்கள் மற்றும் மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளிட்டவையும் அடங்கும். இது ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்கும் முயற்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.