சென்னை: படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் மூலம் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 500 பேருக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரி வளாகத்தில், 300 மாணவர்களுக்கு சேப்பாக்கத்தில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேற்கண்ட போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் நடத்தப்பட்டு புதிய சேர்க்கைகள் நடைபெற உள்ளன. வார நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஆறு மாத காலத்திற்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் 01-01-2024 அன்று குறைந்தபட்சம் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 18 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். மேற்கண்ட போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படவில்லை.
பயிற்சியில் சேர விரும்புவோர் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மைய இணையதளமான www.cecc.in மூலம் 10.09-2024 முதல் 24.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சிப் படிப்புகளுக்கான சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு 044 – 25954905 மற்றும் 044 – 28510537 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சாதி வாரியான இடங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர் மற்றும் தேர்வானவர்களின் விவரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்படும்.
அக்டோபர் இரண்டாம் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கிறேன்.