சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் மத்திய செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ் செம்மொழி நூல்கள், பழங்கால இலக்கியம், இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், தமிழ் மொழி ஆய்வு மற்றும் தமிழ் வளர்ச்சி பணிகளும் நடந்து வருகிறது. தமிழக முதல்வரைத் தலைவராகக் கொண்ட இந்த நிறுவனத்தின் இயக்குநராகப் பேராசிரியர் ரா.சந்திரசேகரன் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவராக டாக்டர் சுதா சேஷையனை நியமித்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவர் பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். டாக்டர் சுதா சேஷையன், அரசு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராகவும், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ் ஆர்வலரான இவர் 30-க்கும் மேற்பட்ட இலக்கிய மற்றும் ஆன்மீக நூல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி, சொல்லின் செல்வர் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.