தர்மபுரி/மேட்டூர்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று காலை வினாடிக்கு 18,000 கன அடியாக இருந்தது.
மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஒகேனக்கல் அருவிகள் மற்றும் ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 13,217 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 14,629 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 111.19 அடியாகவும், நீர் இருப்பு 80.11 டிஎம்சியாகவும் இருந்தது.