டெல்லி: பண்டிகை கால தேவை மற்றும் இறக்குமதிக்கான வரி குறைப்பு போன்ற காரணங்களால் இந்தியாவின் தங்கம் இறக்குமதி ஒரே மாதத்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்கள் மிகவும் மங்களகரமான நாட்கள் எனவே மக்கள் பொதுவாக தங்கத்தை அதிகமாக வாங்குவார்கள். இதனால் தங்க நகைகள் விற்பனை அதிகரிக்கும்.
இந்நிலையில், ஜூலை மாதத்தில் 26,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட சூழலில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 84,000 கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே மாதத்தில் தங்கம் இறக்குமதி 221.41% அதிகரித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி 13 ஆண்டுகளுக்கு 15% ஆக இருந்தது, ஆனால் கடந்த மத்திய பட்ஜெட்டில் அது 6% ஆக குறைக்கப்பட்டது.
இதனால் இந்த வரி குறைப்புக்கு தங்கம் இறக்குமதியும் காரணமாக கூறப்படுகிறது. அதேசமயம், அதிகபட்சமாக 40 சதவீதம் தங்கம் சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 16 சதவீத தங்கமும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து 10 சதவீதமும் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. மத்திய வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் உள்ளது.