சென்னை: 95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
5-வது நாளான நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே 3-2 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிராவை வீழ்த்தியது. இந்திய ரயில்வே அணி சார்பில் யுவராஜ் வால்மீகி (13-வது நிமிடம்), சிம்ரன்ஜோத் சிங் (40-வது நிமிடம்), சிவம் ஆனந்த் (47-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு பீல்டு கோல் அடித்தனர்.
மகாராஷ்டிரா அணி சார்பில் ரோகன் பாட்டீல் (59-வது நிமிடம்), வெங்கடேஷ் (60-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் கர்நாடகா அணி 4-3 என்ற கோல் கணக்கில் போபாலை வீழ்த்தியது.
கர்நாடகா தரப்பில் அபரன் சுதேவ் (12-வது மற்றும் 47-வது நிமிடம்), ராகுல் (13-வது மற்றும் 40-வது நிமிடம்) ஆகியோர் தலா இரண்டு கோல்கள் அடித்தனர். போபால் அணி சார்பில் ஃபராஸ் (7-வது நிமிடம்), மோகன் சிங்கலா (46-வது நிமிடம்), கோபி குமார் சோன்கர் (49-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.