சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
எம்.டி., எம்.எஸ்., போன்ற முதுகலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்கவும், தற்போதுள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தில் தற்போது கல்லூரியில் உள்ள இளங்கலை மருத்துவக் கல்வி இடங்கள் மற்றும் முதுகலை மருத்துவக் கல்வி இடங்களின் அங்கீகாரம் குறித்த தகவல்களைக் குறிப்பிட வேண்டும்.
புதிய இடங்களை உருவாக்குவதற்கான அத்தியாவசியச் சான்றிதழ் மற்றும் உறுப்புக் கல்லூரியின் ஒப்புதல் சான்றிதழை சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களில் பெற்று, பெயர், வரிசை எண் ஆகியவற்றை சரியாகப் பதிவு செய்து விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.
முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான வழிகாட்டுதல்களின்படி விண்ணப்பங்கள் இருக்க வேண்டும்.