ரத்தன் டாடாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா (86) காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரத்தன் டாடாவின் துணிச்சலான அணுகுமுறை மற்றும் சமூக ஈடுபாட்டிற்காக அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிராவில் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரத்தன் டாடாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டுள்ளது.
ரத்தன் டாடாவின் உடல் மும்பையில் உள்ள நாரிமன் பாயின்ட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரத்தன் டாடாவின் உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டது. அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.