டெல் அவிவ்: நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹிஸ்புல்லா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் இஸ்ரேலிய வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து கடந்த ஓராண்டாக காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், ஹமாஸின் ஆதரவுடன் லெபனானின் ஹிஸ்புல்லா, வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி வருகிறது.
ஈரான் ஹெஸ்புல்லாவை ஆதரிக்கிறது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக ஹெஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்நிலையில், தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவமும் தரைவழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலியானதாகவும், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
ட்ரோன் தாக்குதலில் 61 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் தேசிய மீட்புக் குழு கூறியுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் உயிரிழந்ததை உறுதி செய்தது.
இதற்கிடையில், ‘போருக்கு தயார்’ என ஈரான் அறிவித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது.