ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அக்டோபர் 3-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்தின.
குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளிகள்), நியூசிலாந்து (6 புள்ளிகள்) முதல் இரண்டு இடங்களைப் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
இந்தியா (4), பாகிஸ்தான் (2), இலங்கை (0) ஏமாற்றமளிக்கும் வகையில் வெளியேறியது. குரூப் பி பிரிவில் மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், மொத்த ரன் ரேட் அடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் (1.536), தென்னாப்பிரிக்கா (1.382) ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. இங்கிலாந்து (1.091), வங்கதேசம் (2), ஸ்காட்லாந்து (0) வெளியேறியது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தும் அரையிறுதிப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. சாம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி அக்டோபர் 20ஆம் தேதி துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.