புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 81 தொகுதிகளுக்கும் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு), ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (எல்ஜேபி) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து பா.ஜ.க. போட்டியிடுகிறது.
இந்நிலையில், பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
அஸ்ஸாம் முதல்வரும், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் பா.ஜ.க. இணைப் பொறுப்பாளருமான ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது:-
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 68 இடங்களில் போட்டியிடும். மீதமுள்ள 13 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும். அதன்படி, ஏஜேஎஸ்யு 10 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், எல்ஜேபி ஒரு தொகுதியிலும் போட்டியிடும்.
இதற்காக கூட்டணி கட்சிகள் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அப்போதுஏஜேஎஸ்யு தலைவர் சுதேஷ் மகதோ, ஜார்கண்ட் பா.ஜ.க. தலைவர் பாபுலால் மராண்டி, மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஜார்க்கண்ட் தேர்தலில் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் கட்டமாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், இதில் 462 ஆண்கள், 533 பெண்கள் என மொத்தம் 995 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 2.60 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1.13 லட்சம் பேர் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆவர்.
ஜார்க்கண்டில் அனைத்து வாக்குச் சாவடிகளும் தரை தளத்தில் அமைக்கப்படும். இதில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்வுதளங்கள் அமைக்கப்படும். மேலும் சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்படும்.
தேர்தல் நாளில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு முறையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள 43 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 25 கடைசி நாளாகும்.
மாநிலத்தில் மொத்தமுள்ள 2.60 கோடி வாக்காளர்களில் 11.84 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.