சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தயாரிக்கும் படம் ‘அலங்கு’.
இதன் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்‘ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் தனது அடுத்த படமான ‘அலங்கு’ படத்தை இயக்கவுள்ளார்.
குணநிதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அவற்றுடன் நாயும் முக்கிய பங்கு வகிக்கிறது. படத்திற்கு அஜீஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா, டி.சபரீஷுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.
படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அன்புமணி ராமதாஸுக்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் சங்கமித்ரா திரைப்பட தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார்.
அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் நேரத்தில் மகள் சங்கமித்ரா தனது தாயாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.