புதுக்கோட்டை: தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ.க.,வின் ‘சி’ டீம் என, சட்ட அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, ‘வெற்றி கொள்கை விழா’ என்ற பெயரில், நேற்று பிரமாண்டமாக நடந்தது.
மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், ”பிரிவினைவாதம், ஊழல் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும், ஆட்சியும் அதிகாரமும் பகிரப்படும்.
‘திராவிட மாடல் ஆட்சி’ என்று மக்கள் விரோத ஆட்சியை தவறாக வழிநடத்துகிறார்கள். கட்சி நிறத்தைத் தவிர வேறு எந்த நிறத்தையும் நாம் பூச முடியாது. மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையை மேம்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். நமது அரசியல் பயணத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே எனது அரசியல் குறிக்கோள்” என்றார்.
இதனிடையே புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்ட அமைச்சர் ரகுபதி, “விஜய் பாஜகவின் ‘ஏ டீம்’, ‘பி’ டீம் அல்ல. பாஜகவின் ‘சி டீம்’ தான் விஜய். நேற்று நடந்த தமிழ்நாடு வெற்றிக் கழக மாநாடு மிகப்பெரிய சினிமா மாநாடு. அதிமுக பற்றி பேசுவது நடக்காது.விஜய் கட்சியை பற்றி பேசவில்லை. பாஜகவை பலப்படுத்த அதிமுகவினரை பிளவுபடுத்துவதே விஜய்யின் நோக்கம். விக்கிரவாண்டியில் நேற்று விஜய் நடத்தியது போல் திமுகவினர் ஏற்கனவே பல கூட்டங்களை நடத்தியுள்ளனர்.
திராவிட ஆட்சி முறையை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. சிறுபான்மையினர் நலனுக்காகவும், கொள்கைக்காகவும் 2 முறை ஆட்சியை இழந்த கட்சி திமுக. திராவிடம் என்பது தமிழகத்தில் இருந்து நீக்க முடியாத சொல். இளைஞர்கள் நம்பும் இயக்கம் திமுக. இவ்வாறு அவர் கூறினார்.