சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட ‘எக்ஸ்’ இணையதள பதிவில் கூறியிருப்பதாவது:- நவ., துவங்கி, 22 நாட்களாகியும், பல நியாய விலைக் கடைகளுக்கு, 200 கிலோ பருப்பு மட்டுமே சப்ளை செய்யப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான கடைகளுக்கு சப்ளை செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
நியாய விலைக் கடைகளில் கடந்த சில மாதங்களாக துவரம் பருப்பு முறையாக வழங்கப்படாததால், ஒரு கிலோ துவரம் பருப்பு ஜூன் மாதத்தில் ரூ. 180 ஆக இருந்தது, தற்போது ரூ. 210 ஆக உயர்ந்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் மலிவு விலையில் பருப்பு கிடைப்பது மிகவும் அவசியம். இதை உணர்ந்து, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நவம்பர் மாதத்துக்கான துவரம் பருப்பு தடையின்றி, தாமதமின்றி வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2024 நவம்பரில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் 2,03,84,122 கிலோ உளுந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 1,62,83,486 கிலோ விநியோகிக்கப்பட்டுள்ளது. 92 சதவீதம் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 68,44,719 கிலோ உளுந்து இருப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில், 66.91 லட்சம் கிலோ துவரம் பருப்பு இருப்பு உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை துவரம் பருப்பு மற்றும் பாமாயில் சீராக விநியோகம் செய்ய தேவையான 6 கோடி கிலோ துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது,” என்றார்.